search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
    • நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள். இதனால் 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறுகையில், "மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளனர்" என்றார்.

    இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு.
    • இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், பிறந்த குழந்தைகள் (12) உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உயிரிழந்த 24 பேர்களில், 12 பேர் பிறந்த குழந்தைகள் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் தான் நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை, இதன் காரணமாகவே நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

    ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹாசன் முஷ்ரிஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களை விரைந்து விசாரணை நடத்தவும், மருந்துகள் இருப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    • பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர்.
    • பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். அவர்களுக்கு கடைக்காரர் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தார்.

    பழச்சாறில் கலப்பதற்காக அவரிடம் ஐஸ் கட்டி இல்லை. எனவே ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் காணப்பட்ட சிலிக்கா ஜெல்லை பழச்சாறில் கலந்தார்.

    இந்த பழச்சாறை குடித்த 13 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிலிக்கா ஜெல் நச்சுத் தன்மையற்றது என்றாலும் அது கடுமையான வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 13 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தவறான ஐஸ் பயன்படுத்தியதால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. ஆனாலும் பீதியடைய தேவையில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வெளியில் பழச்சாறு உட் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் 4 பிரீசர் பெட்டிகள் உள்ளன. பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்கப்படும். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்து ரத்த வங்கி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. ஆனால் அதுபற்றி அறியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுபற்றி அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கர்ப்பிணிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொன்னேரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது, கொரோனா தொற்றின் போது இறந்த நர்சுகளின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 த்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்வதுண்டு இந்நிலையில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்டசுற்று வட்டார பகுதிகளில் கொலை, தற்கொலை, சாலை விபத்து மற்றும் விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உடல்களை பாதுகாக்க மருத்துவமனையில் இரண்டு ப்ரிசர்பாக்ஸ் மட்டுமே உள்ளன.

    சில நேரங்களில் கூடுதலாக உடல்கள் வருவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பபடுகின்றன. இதனால் உறவினர்களிடையே கடும் வாக்குவாதம், பெரும் சிரமம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கூடுதலாக ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனையில் கூடுதலாக இருந்த ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு பிணவறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமள விஸ்வநாதன் தலைமை மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனி மருத்துவமனைக்கு கூடுதலாக உடற்கூறு ஆய்விற்கு சடலங்கள் வந்தால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    • தேசிய தரச்சான்று வழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது.
    • சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக ராஜா வெற்றி பெற்றது முதல் சங்கரன்கோவில் மருத்துவ மனைக்கு தேவையான வசதி களை ஏற்படுத்தி தர வேண்டுமென அமைச்சர்கள், அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    காசநோய் கண்டறியும் கருவி, ரூ. 9 கோடியில் மருத்துவ கட்டிடங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 500 படுக்கை வசதிகள் மற்றும் படுக்கை விரிப்புகள், நீர்த்தேக்கத் தொட்டி, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை கூடம், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை எந்திரம் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தேசிய தரச்சான்றுவழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது. இந்த ஆய்வை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நடைபெற்று வரும் பணிகள், நடத்த முடிந்த பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பெறலாம்.

    தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம், கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர். டான்சில் அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 நோயாளி களுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்த சங்கரன்கோவில் மருத்து வமனை மருத்துவர்க ளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின் போது தென்காசி மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், அரசு சங்கரன்கோ வில் மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில் சேகர், தி.மு.க. மாணவரணி வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.
    • 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும்.

    சென்னை:

    சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் 5,09,664 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 83,430 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 5,93,094 பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நகர்புறங்களில் செயல்படுத்தும் வகையில் பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

    30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஸ்டிப் பயன்படுத்துவது போல் சிறுநீரில் இந்த ஸ்டிப்பை போட்டால் ஆல்புமின் அளவை காட்டி விடும்.

    ஆல்புமின் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயலிழப்பதாக அர்த்தம். இதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

    சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டு கொண்டிருந்தார்.
    • விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் திடிர் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டிருந்தார்.

    பின்னர் உள் நோயாளிகள் பிரிவில் பெண்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிக்கு சென்று விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், தலைமை மருத்துவர் அசோகன்,பொன்னோரி நகராட்சி ஆனையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், டாக்டர்கள் பெனடிக், விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஆலங்குளம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஆலங்குளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஆலங்குளம் வந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
    • பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

    • புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார அரசு மருத்துவமனை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.

    புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கழிப்பறை மற்றும் பிற உபயோகத்துக்கு தனியாக ஒரு சின்டெக்ஸ் தொட்டியும், குடிநீருக்கு வேறொரு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கம்போல் நேற்று மருத்துவமனை ஊழியர்கள் குழாயில் தண்ணீரை பிடித்து முகம் கழுவியபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    பின்னர் அங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டிட மாடியில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் பார்த்தபோது அதில் 2 குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டனர்.

    பின்னர் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் அந்த 2 குரங்குகள் உடல்களையும் மீட்டு மருத்துவமனை பகுதியில் அடக்கம் செய்தனர்.

    அதன் பின்னர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு கிருமிநாசினி தெளித்து தொட்டியை சுத்தம் செய்தனர்.

    குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருக்கும் பொதுமக்கள் கூறும்போது,

    விராலிமலை பகுதியில் அதிக அளவு குரங்குகள் மற்றும் மயில்களின் நடமாட்டம் உள்ளது. இருப்பினும் தொட்டியை சரியாக மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் தண்ணீர் தேடி வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து ஏற முடியாமல் இறந்துள்ளது.

    இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதுவே குடிநீர் தொட்டியாக இருந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும். இந்த தண்ணீரில் குளித்து பயன்படுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பழைய தண்ணீர் தொட்டியை முற்றிலுமாக அகற்றி விட்டு நல்ல முறையில் மூடி இருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்றனர்.

    ×